பூத் கமிட்டி நிர்வாகிகள் அ.தி.மு.க. வெற்றியை குவிக்க அயராது பாடுபட வேண்டும் - அமைச்சர் பேச்சு

பூத் கமிட்டி நிர்வாகிகள் அ.தி.மு.க. வெற்றியை குவிக்க அயராது பாடுபட வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

Update: 2018-12-17 01:28 GMT
திருப்புவனம்,

மானாமதுரை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த திருப்புவனம் ஒன்றிய, நகர பகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. உள்பட நிர்வாகிகள் வந்திருந்தனர்.

அவர்கள் திருப்புவனம் ஒன்றிய பகுதியை சேர்ந்த மணலூர், கழுகேர்கடை, தட்டாங்குளம், மடப்புரம், லாடனேந்தல், திருப்புவனம் நகர் பகுதியான எம்.ஜி.ஆர். நகர், திருப்புவனம், பழையூர் ஆகிய இடங்களை சென்று நிர்வாகிகளிடம் கலந்துரையாடல் நடத்தினர். மடப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:- பூத் கமிட்டியில் 18 பேர் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. 50 பேர் வரை நியமனம் செய்யலாம்.

அதேபோல இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும், ஏனெனில் அவர்கள் தான் களப்பணியில் விரைந்து செயல்படுவார்கள். எனது தொகுதியில் 92 பேர் வரை பூத் கமிட்டியில் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இங்கு நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பூத் கமிட்டியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

பொதுமக்கள் இரட்டை இலைக்கு ஓட்டுப்போட தயாராக உள்ளனர். அவர்களின் வாக்குகளை கட்சியினர் தான் திறம்பட செயல்பட்டு சேகரிக்க வேண்டும். எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெரும். பூத் கமிட்டி நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றினால் அ.தி.மு.க. வெற்றியின் வாக்குகள் வித்தியாசம் அதிகமாக இருக்கும். எனவே பூத் கமிட்டி நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டும். அடுத்த முறை ஆய்வுக்கு வரும் போது, அனைத்து நிர்வாகிகளும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் கணேசன், நகர் செயலாளர் நாகரத்தினம், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சிவதேவ்குமார், முன்னாள் துணைத் தலைவர் புகழேந்திரன், மடப்புரம் ஊராட்சி கழக செயலாளர் ஜெய்சங்கர், கிளை செயலாளர்கள் சீனிவாசன், கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவிலில் அமைச்சர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்