சாத்தூரில் சாலைகளை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த த.மா.கா. முடிவு

சாத்தூரில் சாலைகளை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த த.மா.கா. முடிவு செய்துள்ளது.

Update: 2018-12-17 00:32 GMT
சாத்தூர்,

சாத்தூர் நகர, வட்டார த.மா.கா. ஊழியர் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பாண்டியன், நகர துணைத் தலைவர் ஜோதிநிவாஸ், மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் கும்கி கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் திறந்து பல மாதங்களாகியும் மின் விளக்கு இன்றுவரையும் பொருத்தப்படாமல் உள்ளது. சுற்றுப்புற கிராம மக்கள் நலன்கருதி உடனடியாக நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மின் விளக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும், சாத்தூர் நான்கு வழிச்சாலையில் படந்தால் சந்திப்பில் உள்ள சர்வீஸ் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகிறார்கள். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக பழுது அடைந்த சாலையை சீர் செய்ய வேண்டும்.

சாத்தூர் நகராட்சி மூலம் வழங்கும் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் இருப்பதை கண்டித்தும், சாத்தூர் முக்குராந்தல் பகுதி மற்றும் சாத்தூர் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இருந்து அண்ணாநகர், குருலிங்காபுரம், முத்துராமலிங்கபுரம், படந்தால், ரெங்கப்பநாயக்கன்பட்டி வரை செல்லும் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதால் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தை கண்டித்தும், சாலையை சீரமைக்கக்கோரியும் வருகிற 27-ந் தேதி சாத்தூர் வடக்கு ரதவீதியில் தெற்கு மாவட்ட தலைவர் அரசன் ஜி.வி. கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மேற்கு வட்டார தலைவர் முத்துவேல், நகர பொருளாளர் சதீஷ்குமார், நகர பொதுச்செயலாளர் ரவி, நகர இளைஞரணி தலைவர் சதாம் உசேன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்