பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காங்கேயம் காளைகள்
பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி ஜல்லிக்கட்டுக்கு காங்கேயம் காளைகள் தயாராகி வருகின்றன.
தாராபுரம்,
தமிழக வரலாற்றில் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்து, அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து போராடினார்கள் என்றால், அது ஜல்லிக்கட்டுக்கான போராட்டமாகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு தமிழர்களின் ரத்த நாளங்களில் பற்றிப் படர்ந்து ஒட்டிக் கொண்டிருந்தது ஜல்லிக்கட்டு. இந்த வீர விளையாட்டுக்கு இந்தியாவில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை, யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இன்றைக்கும் தென்மாவட்டங்களில் அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டை காண்பதற்காக, வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் பல ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில், அந்தந்த ஊர் காளைகள் மட்டுமின்றி மற்ற ஊர்களிலிருந்தும் காளைகள் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வைப்பது வழக்கம்.
ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் காளைகளுக்கு, அதன் உரிமையாளர்கள் கார்த்திகை மாதம் தொடங்கியதும் சிறப்பு பயிற்சிகளை வழங்குவது வழக்கம். குறிப்பாக மண் மேடுகளை அமைத்து, காளைகளை கொம்புகளால் கிளறவைப்பது. ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, தாண்டும் பயிற்சி என பல பயிற்சிகள் காளைகளுக்கு அளிக்கப்படும். தவிர ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு அதிக ஊட்டச்சத்து நிறைந்த தீவனங்கள் கொடுத்து அதன் உரிமையாளர்கள் வளர்த்து வருவார்கள்.
கொங்கு மண்டலத்தைப் பொருத்தவரை, இங்கு காங்கேயம் காளைகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டாலும், இதுவரை ஜல்லிக்கட்டுக்கு என காளைகளை வளர்ப்பதில்லை. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் காங்கேயம் காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த காளைகளில் பயிற்சி பெற்ற காளைகள் சிலவற்றை மட்டும் ரேக்ளா பந்தயங்களுக்காக பயன்படுத்துகிறார்கள். ரேக்ளாவிற்கு தேர்வு செய்யப்படும் காங்கேயம் காளைகள், இளங்கன்று பருவத்திலேயே அவைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு பயிற்சி பெற்ற ரேக்ளா காளைகள் இந்த பகுதியில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேல் உள்ளன.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வதற்காக, இந்த பகுதியில் காங்கேயம் காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக காங்கேயம் காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த காளைகளுக்கு மதுரை மாவட்டத்திலிருந்து சிறப்பு பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து காங்கேயம் காளை ரேக்ளா நலச் சங்கத்தின் மாநில தலைவர் அப்பாதுரை கூறியதாவது:-
கொங்கு மண்டலத்தில் காங்கேயம் இன காளைகளின் வளர்ப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. விவசாயத்திற்கு மாடுகளின் தேவை குறைந்துவிட்டது. போக்குவரத்திற்கு இப்போது காளை மாட்டு வண்டிகள் கிடையாது. மாடுகளை குறிப்பாக காளைகளை வளர்ப்பது பொருளாதார ரீதியாக சிரமம் என்பதால் விவசாயிகள் காளைகள் வளர்ப்பதை தவிர்த்து வருகிறார்கள். இதே நிலை நீடித்தால் கொங்கு மண்டலத்திற்கு பெருமையைத் தேடித்தந்த காங்கேயம் இன மாடுகள் முற்றிலும் அழிந்து போய்விடும். காங்கேயம் காளைகளின் வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதில் ஒன்றுதான் ரேக்ளா. ரேக்ளாவிற்காக தேர்வு செய்யப்படும் காங்கேயம் காளைகளுக்கு, முறையான பயிற்சி அளிக்கப்பட்டு பிறகு பந்தயங்களில் சேர்க்கப்படுகிறது.
காங்கேயம் காளை வளர்ப்பை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்றால் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளுக்காக காங்கேயம் காளைகளை வளர்க்க வேண்டும் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் அனுமதி கிடைத்த நாளிலிருந்து, இந்த பகுதி விவசாயிகள் ஜல்லிக்கட்டுக்காக காங்கேயம் காளைகளை தயார்படுத்த தொடங்கி விட்டார்கள். தற்போது 25-க்கும் மேற்பட்ட காங்கேயம் காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வதற்காக தயாராக இருக்கிறது. தாராபுரம் பகுதியில் இந்த காளைகளுக்கு கடந்த 2 வருடமாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த, காளை பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
வரும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் இந்த காளைகள் கலந்துகொள்ளும், பரிசுகளை பெறவேண்டும் என்பது எங்களுடைய நோக்கமல்ல. காளைகள் வாடிவாசலில் நுழைந்து பழக வேண்டும் என்பதற்காக அனுப்பி வைக்கப்படுகிறது. விரைவில் கொங்கு மண்டலத்திலும் பெரிய அளவிலான ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் ஏராளமான காங்கேயம் காளைகள் கலந்து கொள்ளும்
இவ்வாறு அவர் கூறினார்.