குடிமகன்களின் கூடாரமாக மாறி வரும் நடைமேடை மேம்பாலங்கள்; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஈரோட்டில் உள்ள நடைமேடை மேம்பாலங்கள் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருவதால், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-12-16 23:38 GMT

ஈரோடு,

ஈரோடு பஸ் நிலையம் மேட்டூர் ரோட்டில் நடைமேடை மேம்பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கிறது. மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் சிரமமின்றி சாலையை கடக்க நடைமேடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு நடைமேடை மேம்பாலத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் வழக்கம்போல் மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே பொதுமக்கள் சாலையை கடந்து செல்கிறார்கள். அங்கு அடிக்கடி சிறிய விபத்து ஏற்படுவதும் உண்டு.

பஸ் நிலையத்தில் மேம்பாலத்துக்கு ஏறும் பகுதியில் சுகாதாரம் இல்லாமல் இருப்பதும், மேம்பாலத்தில் காலி மதுபாட்டில்கள் சிதறி கிடப்பதுமே பொதுமக்கள் பயன்படுத்தாததற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இதேபோல் ஈரோடு காசிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளங்களை கடப்பதற்காக நடைமேடை மேம்பாலம் புதிதாக அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. காலை, மாலை நேரங்களில் அந்த வழியாக அதிகமான ரெயில்கள் வந்து செல்வதால் பலரும் நடைமேடை மேம்பாலத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால் அந்த நடைமேடையை பொதுமக்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே ஈரோட்டில் உள்ள 2 நடைமேடை மேம்பாலங்களிலும் மின் விளக்குகள் அமைத்து பொதுமக்கள் பயன்படுத்துவற்குரிய வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:–

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து மேட்டூர் ரோட்டை எளிதாக கடந்து விட முடியாது. அந்த பகுதியில் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும். தற்போது நாச்சியப்பா வீதியில் பஸ்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால், மேட்டூர் ரோடு வழியாகவே பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் சாலையை கடக்க கூடுதல் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக நடைமேடையை பயன்படுத்தலாம் என்றால், பஸ் நிலையத்தில் இருந்து நடைமேடைக்கு ஏறும் பகுதி மோசமாக உள்ளது.

அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அங்கு செல்லவே சிரமப்படுகிறார்கள். துர்நாற்றத்தை பொறுத்துக்கொண்டு சிரமப்பட்டு படி ஏறி சாலையை கடப்பதைவிட போக்குவரத்து நெரிசலிலேயே சாலையை கடந்து விடலாம் என்று பொதுமக்களுக்கு தோன்றுகிறது. எனவே நடைமேடை அமைந்துள்ள பகுதியை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுத்தம் செய்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களும் மேம்பாலத்தில் படி ஏறி செல்ல விரும்புவார்கள். அதேபோல் மேம்பாலத்தில் போதுமான வெளிச்சம் இல்லை. படிக்கட்டு ஏறும் பகுதியில் மின்விளக்குகளே கிடையாது. இதனால் மேம்பாலத்தை இரவு நேரங்களில் மதுபிரியர்கள் பலர் ‘பார்’ போல பயன்படுத்தி வருகிறார்கள்.

இதே நிலைதான் காசிபாளையம் நடைமேடை மேம்பாலத்திலும் தொடர்கிறது. புதிதாக நடைமேடை மேம்பாலம் அமைக்கப்பட்டு இருந்தாலும், மின்விளக்குகள் பொருத்தப்படவே இல்லை. காலையிலும், மாலை வேளையிலும் பொதுமக்கள் பலர் நடைமேடை மேம்பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் வெளிச்சம் இல்லாததால் மாலை 6 மணிக்கு மேல் குடிமகன்களின் கூடாரமாக மாறிவிடுகிறது. அருகில் டாஸ்மாக் கடை உள்ளதால் குடிமகன்கள் கடையில் இருந்து மதுவை வாங்கிவிட்டு மேம்பாலத்திற்கு வந்து சாவகாசமாக உட்கார்ந்து மது அருந்துகிறார்கள். எனவே அங்கு மின்விளக்குகள் பொருத்தப்பட்டு இரவு நேரங்களில் எரியவிட்டால், குடிமகன்களின் தொல்லை குறையும். பொதுமக்களும் நடைமேடையை பயன்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்