பெட்ரோலிய நிறுவன வளாகத்தில் 31 குரங்குகள், 14 புறாக்கள் செத்து கிடந்தன 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

பன்வெல் அருகே பெட்ரோலிய நிறுவன வளாகத்தில் 31 குரங்குகள், 14 புறாக்கள் செத்து கிடந்தன. இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் புதைக்க முயன்றதாக பி.பி.சி.எல். அதிகாரிகள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-12-16 23:25 GMT
மும்பை,

நவிமும்பை பன்வெல் அருகே உள்ள போசாரி பகுதி மரங்கள் நிறைந்த வனப்பகுதியாகும். இங்கு அதிகளவில் குரங்குகள் வசிக்கின்றன. இங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் தான் கர்னாலா பறவைகள் சரணாலயம் உள்ளது. எனவே இந்த இடம் பறவைகளின் புகலிடமாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில், போசாரி பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.பி.சி.எல்.) நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் நேற்று முன்தினம் 31 குரங்குகள் மற்றும் 14 புறாக்கள் மர்மமான முறையில் செத்து கிடந்தன.

அவற்றை அந்த நிறுவன அதிகாரிகள் வனத்துறைக்கு தெரிவிக்காமல் புதைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து தகவல் கிடைத்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த குரங்குகள் மற்றும் புறாக்களை கைப்பற்றினர்.

வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அங்குள்ள ராட்சத ரசாயன டாங்கில் இருந்து கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 10 மணிக்கு மேல் திடீரென நிட்ரிக் என்ற கியாஸ் கசிந்து உள்ளது.

காற்றில் கலந்த அந்த கியாசை சுவாசித்ததன் காரணமாகவே குரங்குகள் மற்றும் புறாக்கள் பாதிக்கப்பட்டு செத்து மடிந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வனத்துறையினர் குரங்குகள் மற்றும் புறாக்களை உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கியாஸ் கசிவால் குரங்குகள், புறாக்கள் செத்தது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்காமல் சம்பவத்தை மூடி மறைக்க முயன்ற பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் என 7 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கியாஸ் கசிவு சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இது குறித்த அறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் 2 நாளில் சமர்ப்பிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்