சிறுபாக்கம் பகுதியில் 15 ஆடுகள் திருட்டு, துப்பாக்கியுடன் வந்த மர்மநபர்களால் பரபரப்பு
சிறுபாக்கம் பகுதியில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் 15 ஆடுகளை திருடி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுபாக்கம்,
கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அடுத்த வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் வேலன். இவர் தனது வீட்டின் அருகே கொட்டகையில் ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவரது ஆடுகள் திடீரென சத்தம்போட்டன. இதனால் தூக்கத்தில் இருந்து எழுந்த வேலன் வெளியே வந்து பார்த்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர், கையில் நாட்டு துப்பாக்கிகளுடன் வேகமாக சென்றனர். இதில் சந்தேகமடைந்த வேலன், ஆட்டு கொட்டகைக்கு சென்று பார்த்த போது, அங்கு கட்டி வைத்திருந்த 6 ஆடுகளை காணவில்லை. அப்போதுதான் மர்ம நபர்கள் அவற்றை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதேபோல், எஸ்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பு ரெட்டி. இவர் வீட்டின் பின் புறம் கொட்டகையில் ஆடுகளை வளர்த்து வருகிறார். அங்கிருந்த 2 ஆடுகளை நாட்டு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதேபோல் எஸ்.புதூரை சேர்ந்த பெரியசாமி, வஜ்ஜிரவேல் ஆகியோருக்கு சொந்தமான தலா 2 ஆடுகள், கருப்பன் மனைவி சித்ராவின் 3 ஆடுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை எஸ்.புதூரில் வீரமணி என்பவரது பசுமாட்டை மர்ம நபர்கள் திருட முயன்றனர். சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால், அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
சிறுபாக்கம் பகுதியில் ஒரே நாள் இரவில் 15 ஆடுகள் திருடப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் நாட்டு துப்பாக்கியுடன் வந்துள்ளதை பொதுமக்கள் பார்த்துள்ள னர். இதன் மூலம் அருகில் உள்ள வனப்பகுதியில் வேட்டையாடுவதற்காக வந்தவர்கள், கிராமத்திற்குள் புகுந்து ஆடுகளை திருடி சென்று இருக்கலாம் என்று கிராம மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்த புகார்களின் பேரில், போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சிறுபாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.