மந்தாரக்குப்பத்தில் துணிகரம், பள்ளிவாசலில் உண்டியலை திருடிக்கொண்டு காரில் தப்பிய கொள்ளையன் - கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை
மந்தாரக்குப்பத்தில் பள்ளி வாசலுக்குள் புகுந்து உண்டியலை திருடிக்கொண்டு ஒரு காரில் கொள்ளையன் தப்பி சென்றுவிட்டான். இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
மந்தாரக்குப்பம்,
மந்தாரக்குப்பம் அடுத்த கெங்கைகொண்டான் பஸ் நிறுத்தம் அருகே மஸ்ஜிதே ரஹமத் பள்ளிவாசல் உள்ளது. இங்கு நேற்று காலை 5.45 மணிக்கு ஏராளமான முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்காக வந்தனர். பள்ளிவாசல் உள்ளே அவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
தொழுகை முடிந்த பின்னர் அனைவரும் வெளியே வந்தனர். அப்போது அங்கிருந்த சுமார் 5½ அடி உயரம் உள்ள ஒரு உண்டியலை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அப்போது அதில், பள்ளிவாசலின் பின்பக்க வாசல் வழியாக ஒருவர் உள்ளே நுழைந்து, அங்கு தொழுகை செய்யும் இடத்தை பார்த்துவிட்டு பின்னர், வெளியே வந்து முன்பக்க வாசல் பகுதிக்கு செல்கிறார். அங்கு ஆட்கள் நடமாட்டம் இருக்கிறதா என்று நோட்டமிடுகிறார். அனைவரும் தொழுகையில் ஈடுபட்டு இருப்பதை உறுதி செய்து கொண்ட அந்த நபர், அங்குள்ள உண்டியலை அலேக்காக தூக்கிக்கொண்டு, பின்பக்க வாசல் வழியாகவே வெளியே சென்றுவிடுகிறார். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு காரின் உள்ளே உண்டியலை வைத்துக்கொண்டு அங்கிருந்து அவர் தப்பிச்செல்லும் காட்சி அதில் பதிவாகி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள், உடனே மந்தாரக்குப்பம் போலீசில் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி அதன் மூலமாக கொள்ளையனை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். திருடு போன உண்டியல், கடந்த 1½ ஆண்டுகளாக திறக்கப்படாமலேயே இருந்து வந்துள்ளது. இதனால் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அதில் பணம் இருந்திருக்கும் என்று பள்ளி வாசலை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். பள்ளிவாசல் உள்ளே புகுந்து மர்ம நபர் உண்டியலை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.