தொழிலாளர்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு முதலாளித்துவத்துக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது - எச்.எம்.எஸ். தொழிற்சங்க அகில இந்திய தலைவர் குற்றச்சாட்டு

தொழிலாளர்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு முதலாளித்துவத்துக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தின் அகில இந்திய தலைவர் ராஜாஸ்ரீதர் குற்றம்சாட்டினார்.

Update: 2018-12-16 22:15 GMT
கோவை,


எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தின் 70-வது ஆண்டு நிறைவு விழா கோவை திருச்சி ரோட்டில் உள்ள எஸ்.என்.அரங்கில் நேற்று நடைபெற்றது. மாநில செயலாளர் எம்.கோவிந்தன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கணபதி சிவக்குமார், மாநில செயலாளர் ஆர்.கே.தேவராஜ், போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் ஆர்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தின் அகில இந்திய தலைவர் சி.ஏ.ராஜா ஸ்ரீதர் பேசும்போது கூறியதாவது:-

எச்.எம்.எஸ். தொழிற்சங்கம் 1948-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக மத, இன, மொழி மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு தொழிலாளர்களின் நலனை மட்டுமே முக்கியமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக இந்த தொழிற்சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவோம் என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு முன்பு கூறியது. ஆனால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. தொழிலாளர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர் நலனுக்கான சமூகபாதுகாப்பு வழங்கப்படவில்லை. வெறும் 3 சதவீத தொழிலாளர்களே சமூக பாதுகாப்பு பெற்று வருகிறார்கள். 97 சதவீதம் முறைசார்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒரு நிறுவனத்தில் தொழிலாளர்கள் நீண்டகாலம் பணியாற்றும் வகையில் நிரந்தர நிலை இல்லை. 5 அல்லது 6 மாதங்களே வேலை வழங்கும் நிலைமை உள்ளது. இதனால் நிரந்தர தொழிலாளர்களாக இல்லாத நிலைமையை உருவாக்கி வருகிறார்கள். மத்திய பா.ஜனதா அரசு தொழிலாளர்களின் நலன்களை புறக்கணித்து முதலாளித்துவத்துக்கு சாதகமான அரசாக விளங்கி வருகிறது. இந்தநிலைமை மாற வேண்டும்.

முறைசாரா தொழிலாளர்களுக்கு முழுமையாக சமூக பாதுகாப்பு அளிக்கப்படுவதற்கும், அதனை நிறைவேற்றுவதற்கான முறையில் தேசிய சமூக பாதுகாப்பு நிதியம் உருவாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கூட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையை உடனடியாக கைவிட வேண்டும், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டங்களை அமல்படுத்துவதுடன், அமல்படுத்த மறுக்கும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில தலைவர் சுப்பிரமணியன், செயல்தலைவர் சுப்பிரமணியம் பிள்ளை, தர்மராஜன், அசுவத்தமன், லாலிரோடு செல்வம், எஸ்.எம்.அல்தாப், இஸ்மாயில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்