விடுமுறை தினத்தையொட்டி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

விடுமுறை தினத்தையொட்டி நேற்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

Update: 2018-12-16 22:45 GMT
குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இதனை குமரியின் குற்றாலம் என சுற்றுலா பயணிகள் அழைப்பார்கள். இங்கு கோடை காலம் உள்பட ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்கிறது. இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும், கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் வருகிறார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து, அருவியின் மேல் தளத்தில் உள்ள நீர் தேக்கத்தில் படகுசவாரி செய்து, சிறுவர் பூங்காவில் விளையாடி குதூகலத்துடன் வீடு திரும்புகிறார்கள்.

குளு.. குளு.. சீசன்

தற்போது, திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் பாய்கிறது. மேலும், வெயிலின் தாக்கம் குறைந்து ‘குளு.. குளு.. சீசன்’ நிலவி வருகிறது. விடுமுறை தினமான நேற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக திற்பரப்பில் குவிந்தனர்.

அவர்கள் அருவியில் குளித்து, சிறுவர் நீச்சல் குளத்தில் நீச்சலடித்து, பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் திற்பரப்பு அருவி நேற்று களைகட்டியது. இதுபோல், மாத்தூர் தொட்டிபாலம், பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி போன்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்