குமாரபாளையம் நகராட்சி பகுதியில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

Update: 2018-12-16 21:45 GMT
குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கூட்டுறவு கட்டிட சங்கத்தில் உறுப்பினர்களுக்கு சிறுசேமிப்பு புத்தகம் மற்றும் வீடு அடமான கடன் திட்டத்தின் கீழ் கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆசியாமரியம் தலைமை தாங்கினார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வக்குமார சின்னையன் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி பொதுமக்களிடம் மாதாந்திர சேமிப்புத்திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறுசேமிப்பு திட்டத்தினை தொடங்கி வைத்து 30 உறுப்பினர்களுக்கு சிறுசேமிப்பு புத்தகத்தினையும், வீடு அடமான கடன் திட்டத்தின் கீழ் 10 உறுப்பினர்களுக்கு ரூ.17 லட்சத்திற்கான காசோலைகளையும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகர்புற சாலைகள் மேம்பாடு திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.11 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை செய்து அமைச்சர் பி.தங்கமணி பணியை தொடக்கி வைத்தார்.

மேலும் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி ஜே.கே.கே.நடராஜா நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு 130 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 37 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் தங்கமணி பேசுகையில், குமாரபாளையம் நகராட்சி மக்களுக்கு பட்டா, பட்டா மாற்றம் வழங்கப்படும் என்று வாகனங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் பதிவு செய்த மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கும் வீட்டுமனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமாரபாளையத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும், பூமிபூஜையும் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சிகளில் குமாரபாளையம் கூட்டுறவு கட்டிட சங்கத்தலைவர் ரவி, நகர வங்கி தலைவர் நாகராஜன், முன்னாள் நகரமன்றத்துணைத் தலைவர் பாலசுப்பிரமணி, குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, நகர அ.தி.மு.க. செயலாளர் நாகராஜன், முன்னாள் செயலாளர் குமணன், தாசில்தார் ரகுநாதன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பர்ஹத் பேகம் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்