திண்டுக்கல் அருகே இரவு, பகலாக குளங்களில் மண் அள்ளும் கும்பல் - நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்
திண்டுக்கல் அருகே இரவு, பகலாக குளங்களில் மண் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
சின்னாளபட்டி,
திண்டுக்கல்லை அடுத்த அ.வெள்ளோடு ஊராட்சியில் வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நடுவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரியகுளம் உள்ளது. பரந்து விரிந்து காணப்படும் இந்த குளத்துக்கு சிறுமலையில் பெய்யும் மழை தண்ணீர் ஓடைகள் வழியாக வந்து சேரும்.
இந்த குளம் நிரம்பி மறுகால் ஓடும் தண்ணீர் திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலை அருகே உள்ள ராஜாகுளத்துக்கு வந்து சேருகிறது. பருவமழை முறையாக பெய்யாததால் குளம் நிரம்பவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குளம் வறண்டு போய் காட்சியளிக்கிறது. இதனால் குளத்தில் இரவு, பகலாக மண் அள்ளப்பட்டு வருகிறது. பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் லாரி, டிராக்டரில் மண் அள்ளப்பட்டு வருகிறது.
இதனால் குளத்தில் ஆங்காங்கே சுரங்கம் அமைத்தாற்போல் பள்ளம் காணப்படுகிறது. ‘கஜா’ புயலின் போது பெய்த மழை தண்ணீர் கண்மாய்க்கு பெருக்கெடுத்து வந்தது. ஆனால் குளத்தில் மண் அள்ளப்பட்டதால் தண்ணீர் தேங்கவில்லை. இதை பயன்படுத்தி மண்ணை அள்ளி சென்று வருகின்றனர்.
பெரியகுளத்தை போன்று வெள்ளோடு நரசிங்கபுரம் அருகே உள்ள குட்டையா குளத்திலும் மண் அள்ளப்பட்டு வருகிறது. இந்த குளத்திலும் 30 அடி ஆழம் வரை மண் தோண்டி எடுத்து டிப்பர் லாரிகள் மூலம் கடத்தி வருகின்றனர். இந்த குளங்களில் குறைந்தளவு தண்ணீர் தேங்கினாலே அருகில் உள்ள கிணறுகளுக்கு ஊற்று எடுக்கும். தொடர்ந்து மண் அள்ளப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் வெள்ளோடு பகுதியை சேர்ந்த சிலர், நேற்று முன்தினம் குட்டையா குளத்தில் மண் அள்ளிக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளை சிறைபிடிக்க முயன்றனர். ஆனால் மணல் அள்ளும் கும்பல் லாரி, பொக் லைன் எந்திரத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர். எனவே குளங்களில் மண் அள்ளுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.