புளியரையில் போலீசார் வாகன சோதனை: கேரளாவிற்கு லோடு ஆட்டோவில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் வாலிபர் கைது
புளியரையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், கேரளாவுக்கு லோடு ஆட்டோவில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செங்கோட்டை,
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை சோதனை சாவடியில் போலீசார் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக லோடு ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. அந்த லோடு ஆட்டோவை போலீசார் மறித்து சோதனை நடத்தி னர். அப்போது அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது.
இதையடுத்து லோடு ஆட்டோவில் வந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வல்லத்தை சேர்ந்த முருகையா மகன் மாரியப்பன் (வயது 29) என்பதும், கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரியப்பனை கைது செய்தனர். மேலும் 1 டன் ரேஷன் அரிசி மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.