பரங்கிமலையில் காங்கிரஸ் கட்சி பேனர்களை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி போராட்டம்

பரங்கிமலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் அனுமதி இன்றி வைக்கப்பட்டு உள்ள பேனர்களை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அனுமதி பெறாத பேனர்கள் அகற்றப்பட்டன.;

Update: 2018-12-16 23:30 GMT
ஆலந்தூர்,

சென்னையில் நடைபெற்ற மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களை வரவேற்று விமான நிலையத்தில் இருந்து விழா நடக்கும் பகுதிகள் வரை சாலையோரத்தில் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு பேனர்கள் வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் பரங்கிமலை தபால் நிலையம் எதிரே காங்கிரஸ் கட்சி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்ததை கண்ட டிராபிக் ராமசாமி, அவை அனுமதி பெறாமல் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை உடனே அகற்றவேண்டும் என்றும் கூறி நடைபாதையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல உதவி பொறியாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்ட டிராபிக் ராமசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காங்கிரஸ் கட்சியினர் பேனர் வைக்க உரிய அனுமதி பெற்று இருந்ததாக கூறி, அதற்கான ஆவணத்தை அவரிடம் காண்பித்தனர். ஆனால் அனுமதி பெறாமல் உள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்று டிராபிக் ராமசாமி வற்புறுத்தினார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன், ஆலந்தூர் மண்டல தலைவர் சீதாபதி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் விரைந்து வந்து பேனர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் மாநகராட்சி அனுமதி பெற்று வைக்கப்பட்டு உள்ள பேனர்களை அகற்றக்கூடாது என்று கூறினர். இதையடுத்து அனுமதி பெறாமல் வைக்கப்பட்டு இருந்ததாக அங்கிருந்த 2 பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

அதன்பிறகு டிராபிக் ராமசாமி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்