செங்கோட்டை, தென்காசியில் அச்சன்கோவில் ஆபரண பெட்டிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்பு
செங்கோட்டை, தென்காசிக்கு வந்த அச்சன்கோவில் ஆபரண பெட்டிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.;
தென்காசி,
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்திபெற்ற அய்யப்பன் கோவில்களில் ஒன்றான தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மகோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 26-ந் தேதி வரை விழா நடக்கிறது.
விழா நாட்களில் அய்யப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரணங்களுடன் ஒரு தங்க வாளும் உண்டு. மேலும் அய்யப்பனின் தங்க அங்கியும், கருப்ப சுவாமியின் வெள்ளி அங்கியும் உண்டு. இந்த தங்க வாளை அய்யப்பன் உபயோகித்ததாகவும், இடத்திற்கு இடம் இந்த வாளின் எடை வேறுபடும் என்றும் நம்பப்படுகிறது. இந்த ஆபரண பெட்டி நேற்று காலை கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து எடுக்கப்பட்டு அங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. பின்னர் காலை 10.30 மணிக்கு புனலூரில் இருந்து செண்டை மேளம் முழங்க பட்டத்து யானை முன்னால் வர பக்தர்கள் ஊர்வலத்துடன் ஆபரண பெட்டி புறப்பட்டது.
கேரள மாநில போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஆபரண பெட்டி வைத்திருந்த வேன் தென்மலை, ஆரியங்காவு வழியாக செங்கோட்டைக்கு வந்தது. அங்கு பஸ்நிலையம் முன்பு அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோவில் முன்பு வந்து நின்றது. அப்போது விநாயகருக்கும், ஆபரண பெட்டிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. முன்னதாக வாடகை கார் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் சங்கத்தினர், அய்யப்பன் கமிட்டி உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆபரண பெட்டிக்கு வரவேற்பு கொடுத்தனர். பின்னர் ஆபரண பெட்டி தென்காசிக்கு புறப்பட்டு சென்றது. வழிநெடுகிலும் பொதுமக்கள் ஆபரண பெட்டியை தரிசனம் செய்தனர்.
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு மதியம் 2.15 மணிக்கு ஆபரண பெட்டி வந்து சேர்ந்தது. அப்போது பக்தர்கள் அதிர்வேட்டு மற்றும் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக ஆபரண பெட்டியை தரிசனம் செய்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் ஆபரண பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.அரிகரன், செயலாளர் ஜி.மாடசாமி, பொருளாளர் தங்கவேல், அய்யப்ப சேவா சங்க தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலை 3.15 மணிக்கு ஆபரண பெட்டி தென்காசியில் இருந்து புறப்பட்டு பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவிலுக்கு மாலையில் சென்றடைந் தது. அங்கு பெண் குழந்தைகள் கைகளில் விளக்கு ஏந்தி ஆபரண பெட்டிக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவிலில் ஆபரண பெட்டி வைக்கப்பட்டது.
இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடக்கிறது. 3-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை சப்பர வீதியுலா மற்றும் கருப்பன் துள்ளல் நடைபெறுகிறது. 9-ம் திருநாளான 25-ந் தேதி தேரோட்டமும், 26-ந் தேதி ஆராட்டும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கேரள தேவசம்போர்டு புனலூர் உதவி ஆணையர் ராதாகிருஷ்ண பிள்ளை, கோவில் நிர்வாக அதிகாரி பினு, கோவில் ஆலோசனை குழு உறுப்பினர்கள் செய்து வருகி றார்கள்.
ஆபரண பெட்டி வருகையையொட்டி தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், சரஸ்வதி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.