பட்டுக்கோட்டையில் 990 கிலோ எடை கொண்ட காரை, தலைமுடியால் இழுத்து 8 வயது சிறுமி சாதனை

பட்டுக்கோட்டையில் 990 கிலோ எடை கொண்ட காரை, தலைமுடியால் இழுத்து 8 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.

Update: 2018-12-16 22:45 GMT
பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வெங்கடேஷ்-ஆஷா தம்பதியின் மகள் சம்யுக்தா (வயது8). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். கராத்தே பயிற்சி பெற்று வரும் இவர், தலைமுடியால் காரை இழுத்து சாதனை படைக்க வேண்டும் என்ற தனது ஆசையை கராத்தே மாஸ்டர் இளையராஜாவிடம் கூறினார்.

இதையடுத்து இளையராஜா, சிறுமி சம்யுக்தாவுக்கு காரை இழுக்கும் முறை குறித்து பயிற்சி அளித்தார். தொடர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த சம்யுக்தா, தலை முடியால் காரை இழுக்கும் முயற்சியை நேற்று மேற்கொண்டார். இந்த சாதனை நிகழ்ச்சி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் நடைபெற்றது.

8 வயது சிறுமி தனது தலை முடியால் காரை இழுக்க முயற்சி செய்வது குறித்த அறிந்த பட்டுக்கோட்டை பகுதி பொதுமக்கள் சிறுமியின் சாதனையை நேரில் பார்க்க திரண்டனர். இந்த நிகழ்ச்சியில் “ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” தென்னிந்திய பொறுப்பாளர் விவேக்நாயர் முன்னிலை வகித்தார்.

இதில் சிறுமி சம்யுக்தா தனது தலைமுடியால் 990 கிலோ எடை கொண்ட காரை 112.2 மீட்டர் தூரம் இழுத்து சென்றார். இந்த தூரத்தை அவர் 1 நிமிடம் 46 நொடிகளில் கடந்தது குறிப்பிடத்தக்கது. ஆசியாவில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் யாரும் செய்யாத சாதனையை மாணவி சம்யுக்தா செய்துள்ளார். இதற்கான சான்றிதழை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தென்னிந்திய பொறுப்பாளர் விவேக்நாயர், சம்யுக்தாவிடம் வழங்கினார். சாதனை படைத்த சிறுமியை பலரும் பாராட்டினர்.

மேலும் செய்திகள்