ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு: தூத்துக்குடியில் 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு வெளியாட்கள் தங்கி உள்ளனரா? என விடுதிகளில் சோதனை
தூத்துக்குடியில் 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரேனும் தங்கி உள்ளனரா? என விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே 22-ந் தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.
அப்போது, நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து மே மாதம் 28-ந் தேதி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்பேரில், ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதன் காரணமாக தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆலையை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர். பல அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டத்தை நடத்தவும் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தூத்துக்குடியில் மே 22-ந் தேதி போராட்டத்தின்போது பெரும்பாலானவர்கள் திரண்ட பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், போராட்டத்தை தூண்டும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து சந்தேகப்படும்படியாக யாராவது ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களுக்கு வந்து உள்ளார்களா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பஸ் நிலையம், ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தூத்துக்குடிக்கு வரும் அனைத்து வழிகளிலும் போலீசார் 8 சோதனைச்சாவடிகளை அமைத்து வாகன தணிக்கை செய்து வருகிறார்கள்.
தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதிகள், ஓட்டல்களில் சந்தேகப்படும்படியாக வெளியாட்கள் யாராவது தங்கி உள்ளனரா? என சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உளவுப்பிரிவு போலீசார் தூத்துக்குடியில் முகாமிட்டு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.