சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை தடுக்க வேண்டும் நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க மாநில கூட்டத்தில் தீர்மானம்
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை தடுக்க வேண்டும் என நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பழனியப்பன், துணைத்தலைவர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மண்டல தலைவர் சிதம்பரம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கிருஷ்ணா, தொழில் வர்த்தக சங்க பொதுச்செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த கூட்டத்தில், சரக்கு கையிருப்பு தொழில் தன்மைக்கு ஏற்ப 3 நாள் முதல் அதிகபட்சம் 10 நாட்களுக்குள் இருக்க வேண்டும். பல்பொருள் அங்காடி மற்றும் மொத்த கடைகளுக்கு நிறுவனங்கள் நேரடியாக வினியோகம் செய்ய ஆரம்பித்துள்ளன. இதை தவிர்த்து அனைத்து ஊர்களில் உள்ள கடைகளுக்கும் வினியோகஸ்தர்கள் மூலமே வினியோகம் செய்ய வேண்டும்.
அன்னிய நிறுவனம் ஒரு நிறுவனத்தின் பெருவாரியான பங்குகளை வாங்கி, இந்திய வணிகத்தில் சில்லரை வணிகத்தை அழிக்கும் நோக்குடன் வர இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை தடுத்து, வினியோகஸ்தர்களையும், சில்லரை வணிகர்களையும் காப்பாற்ற வேண்டும்.
தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் ஆகியோர் வினியோகஸ்தர்களுக்கு ஒப்பந்தம் தரவேண்டும். அதில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளை தெளிவாக குறிப்பிட வேண்டும். அந்த பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வேறு யாரும் வந்து ஆர்டர் எடுக்கவோ, லாரிகளில் பொருட்களை அனுப்பி விட்டு வந்து பணம் வசூலிக்கவோ, நிறுவனத்திலிருந்து அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் உணவு பொருட்களில் ஏதேனும் குறைபாடு காணப்பட்டால் முதல் குற்றவாளியாக தயாரிப்பு நிறுவனங்களையே கருத வேண்டும். வணிகர்கள் நடைமுறைக்கு தேவை இல்லாத சில சட்ட திட்டங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.