வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை,
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், நேற்று மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் உலகநாதன், மாநில செய்தி தொடர்பாளர் கோபிநாத், மாநில துணை செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் சந்தியாகு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் விசுவநாதன் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில், செங்கம் தாலுகா குப்பநத்தம் அணைக்கு ஏறையூரில் இருந்து மேலபுஞ்சை, மேல்நாச்சிப்பட்டு, சேந்தமங்கலம் உள்பட 47 ஏரி வழியாக கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு வந்தால் கீழ்பென்னாத்தூர் தாலுகா பாசன வசதி பெறும்.
மேலும் இந்த 47 ஏரிகளும் பாசன வசதி அளிக்கும். இதன் மூலம் குடிதண்ணீர் வசதியையும் பெற முடியும். எனவே, இதுகுறித்து கலெக்டர் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஆலைகள் தர வேண்டிய மாநில அரசின் பரிந்துரை விலையை உடனே வழங்க வேண்டும். கரும்பு டன்னிற்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். மணிலா மற்றும் உளுந்து பயிர்களுக்கு தர வேண்டிய காப்பீடு தொகை உடனே வழங்க வேண்டும்.
தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை மத்திய, மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.