கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்- அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார்

காரைக்கால் அருகே கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவியை அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார்.

Update: 2018-12-16 00:17 GMT
காரைக்கால்,

காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரிமேட்டை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த 30-ந் தேதி 13 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். கடலில் மீன்பிடித்து விட்டு அவர்கள் கரை திரும்பிய போது பலத்த சூறாவளிக்காற்றில் சிக்கி கடலில் படகு கவிழ்ந்தது. அப்போது 11 மீனவர்கள் கடலில் நீந்தி கரை சேர்ந்தனர். ஆனால், காரைக்கால்மேட்டை சேர்ந்த மீனவர் நீலவர்ணன்(வயது45), நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சின்னக்குடியைச் சேர்ந்த சந்தோஷ்(22) ஆகிய இரு மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமானார்கள். அவர்களது நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

கடலில் மூழ்கி மாயமான காரைக்கால்மேடு மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என காரைக்கால்மேடு கிராம பஞ்சாயத்தார்கள் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, கடலில் மூழ்கி மாயமான நீலவர்ணன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து புதுச்சேரி வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் மாயமான மீனவர் குடும்பத்துக்கு நேரில் சென்று ரூ.2 லட்சம் நிவாரண உதவியை வழங்கினார். அப்போது கலெக்டர் கேசவன், கிராம பஞ்சாயத்தார்கள், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்