லிங்காயத்தை தனி மதமாக அங்கீகரிக்க கோரி மீண்டும் போராட்டம் : எம்.பி.பட்டீல் பேட்டி

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு லிங்காயத்தை தனி மதமாக அங்கீகரிக்க கோரி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் மந்திரி எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-15 23:30 GMT

பெங்களூரு,

விஜயாப்புராவில் நேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் நிறைவடைந்தும் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்துள்ள மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருந்து வருவது உண்மை தான். வருகிற 22-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மந்திரிசபை விரிவாக்கத்தின் போது வடகர்நாடகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் வடகர்நாடக மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதனை ராகுல்காந்தியின் கவனத்திற்கும் எடுத்து செல்லப்படும். எனக்கு கட்சி மேலிடம் மந்திரி பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன்.

லிங்காயத் சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தீவிர போராட்டம் நடந்தது. இதனால் லிங்காயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சிபாரிசும் செய்யப்பட்டது. மாநில அரசின் சிபாரிசை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டது. லிங்காயத் சமுதாய மக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்த விவகாரத்தில் தற்போது சிறிய போராட்டம் நடத்தினாலும், அதனை பெரிதுபடுத்தி விடுகிறார்கள். அதனால் அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு லிங்காயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி மீண்டும் போராட்டம் நடத்தப்படும். அந்த முடிவில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை.

இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.

மேலும் செய்திகள்