கரூரில் முதல் முறையாக பார்வையற்றோருக்கான ‘பிரெய்லி-கேட்பொலி’ நூலகப்பிரிவு

கரூரில் முதல் முறையாக பார்வையற்றோர் எளிதில் படிக்கும் வகையிலான ‘பிரெய்லி-கேட்பொலி’ நூலகப்பிரிவினை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2018-12-15 23:00 GMT
கரூர்,

கரூர் திருவள்ளுவர் மைதானம் அருகே மாவட்ட மைய நூலகம் உள்ளது. இங்கு கரூர், செங்குந்தபுரம், திருமாநிலையூர், கோவை ரோடு உள்ளிட்ட நகர்புற பகுதியை சேர்ந்த பலர் புத்தக வாசிப்பிற்காகவும், போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வதற்காகவும் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கண் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் புத்தகம் மற்றும் செய்தித்தாள் படிக்கும் வகையில் பிரெய்லி மற்றும் கேட்பொலி நூலகப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. கரூரில் முதல்முறையாக ஏற்படுத்தப்பட்ட இதனை நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை அழைத்து பிரெய்லி முறையில் அவர்களை திருக்குறள் உள்ளிட்ட புத்தகங்களை வாசிக்க விட்டு அமைச்சர் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து 51-வது தேசிய நூலக வார விழா நிறைவு நிகழ்ச்சி அங்கு நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 102 நூலகங்கள் உள்ளன. இதில் சுமார் 15 லட்சம் புத்தகங்கள் உள்ளன. மாவட்ட மைய நூலகத்தில் மட்டும் 1,14,680 புத்தகங்கள் உள்ளன. 22,766 நபர்கள் மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். மாநில அளவில் தமிழக அரசின் சிறந்த நூலகத்திற்கான விருதினையும், சிறந்த நூலக ஆர்வலருக்கான விருதினையும் கரூர் மாவட்ட மைய நூலகம் பெற்றுள்ளது. மேலும், கரூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆண்டாங்கோவில் மற்றும் பெரியவடுகப்பட்டி ஆகிய ஊர்ப்புற நூலகங்களுக்கும், இனாம்குளத்தூர் கிளை நூலகத்திற்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தி வரும் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னார்வ வாசிப்பாளர்கள் உதவியுடன் பாடத்திட்டங்களை ஒலி வடிவில் பதிவு செய்து வழங்கவும், பிரெய்லி முறையும் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

நாம் படிக்கும் புத்தகங்கள் நம்மில் மிகப்பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் வல்லமை பெற்றவையாக அமையும். வாசிப்பு மட்டுமே நம்மை வாழ்வில் உயர்த்தும். எனவே அனைவரும் புத்தகங்களை படியுங்கள் நூலகங்களை முறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நூலக வாரவிழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கலை இலக்கியப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு “இளம் படைப்பாளருக்கான விருதுகளையும்”, பாராட்டுச் சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கி பாராட்டினார். மேலும் மாவட்ட நூலக மையத்தில் உள்ள பயிற்சி மையத்தில் பயின்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வெழுதி அரசுப்பணிகள் பெற்றுள்ள நபர்களுக்கும், நூலகத்தின் பெரும் புரவலர்களுக்கும், மாவட்ட அளவில் நூலக ஆர்வலர் விருது பெற்ற வாங்கல் குப்புச்சிப்பாளையம் நூலக உறுப்பினர்களுக்கும், நல்நூலகர் விருதுபெற்றவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா, மாவட்ட நூலக அலுவலர் கார்த்திகேயன், வாசகர் வட்ட நெறியாளர் சேதுபதி, நல் நூலகர் சிவக்குமார் மற்றும் மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.திருவிகா, கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்