உடன்குடி பகுதியில் குளங்களுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

உடன்குடி பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

Update: 2018-12-15 22:00 GMT
உடன்குடி,

உடன்குடி தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. ஒன்றிய, நகர செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. செல்லத்துரை, மாவட்ட அவை தலைவர் அமலி ராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் மூர்த்தி, ராஜா நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் முருங்கை மகாராஜா வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், உடன்குடி பகுதியில் உள்ள குளங்களுக்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் நிறுத்தப்பட்ட மினி பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்கள்தோறும் வாக்குச்சாவடி குழு அமைத்து, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார்.

நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், மாவட்ட துணை செயலாளர் மோகன், பொருளாளர் ஜெபமாலை உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் ஜெய கண்ணன் நன்றி கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் பொன் ஸ்ரீராம் பேசுகையில், கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு உடனே பதவி வழங்கப்படுவதாகவும், பல ஆண்டுகளாக கட்சியில் இருப்பவர்களுக்கு பதவி வழங்குவதில்லை என்றும் கூறினார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்