உதவித்தொகை வழங்கும் விழா: ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்க உதவி செய்ய வேண்டும் வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்க உதவி செய்ய வேண்டும் என்று கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.
வேலூர்,
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ‘அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை’ சார்பில் 2018-19 ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். மயிலாம்பிகை குமரகுரு வரவேற்றார்.
இதில், கோயம்புத்தூர் பண்ணாரி அம்மன் குழுமத்தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 971 மாணவ-மாணவிகளுக்கு ரூ.53 லட்சம் உதவித்தொகை வழங்கி பேசியதாவது:-
உலகில் வளர்ந்த நாடுகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல், தொழிற்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதேபோல் நாமும் தொழிற்கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் அதிகளவு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் உயர்கல்வி கற்பதில் அமெரிக்கா, சீனாவை ஒப்பிடும்போது இந்தியாவில் 10 சதவீதம் பேர் தான் உயர்கல்வி கற்கிறார்கள்.
இந்த சதவீதத்தை நாம் அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்தில் உலகளவில் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியாவாக தான் இருக்கும். இதனை கருத்தில் கொண்டு இளைஞர்களுக்கு நல்ல வழி காட்டினால் உலகளவில் இந்தியா தலை சிறந்தநாடாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேசுகையில் “ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமானால் கல்வி அவசியம். கல்வியில் சிறந்து விளங்கினால் நாடு பொருளாதாரத்தில் வளர்ந்து விடும். தமிழகத்துக்கு வேலூர் மாவட்டம் கல்வியில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இதுவரை ‘அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை’ மூலம் 5,075 மாணவ-மாணவிகளுக்கு ரூ.5½ கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நல்ல திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்க நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும். இந்தியாவில் சுமார் 55 கோடி பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு சரியான முறையில் கல்வி கிடைத்தால் இந்தியா நிச்சயம் வல்லரசு நாடாகி விடும்” என்றார்.
விழாவில், டார்லிங் குழும தலைவர் எம்.வெங்கடசுப்பு, அறங்காவலர்கள் கே.ஜவரிலால்ஜெயின், புலவர் வே.பதுமனார், லட்சுமணன், சைகர் அகமது, கே.எம்.தேவராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை திட்ட இயக்குனர் முத்துவீரன் நன்றி கூறினார்.