கொருக்குப்பேட்டையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

கொருக்குப்பேட்டையில் தம்பியை கழுத்தை அறுத்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-14 22:47 GMT
பிராட்வே,

சென்னை கொருக்குப்பேட்டை கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 21). இவர், வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் இவருக்கு குடிப்பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது.

கணேசன், மோட்டார் சைக்கிள் கேட்டு தனது வீட்டில் உள்ளவர்களிடமும் அவரது அண்ணன் வெங்கடேசன் (25) என்பவரிடமும் தகராறில் ஈடுபட்டார்.

நேற்று மாலை கொருக்குப்பேட்டை பார்த்தசாரதி தெருவில் வெங்கடேசன் சென்றபோது, அங்கு வந்த கணேசன் அவருடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது போதையில் இருந்த கணேசன், தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், பாட்டிலை உடைத்து தனது தம்பி கணேசனை கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆர்.கே.நகர் போலீசார், கொலையான கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே பகுதியில் பதுங்கி இருந்த அவருடைய அண்ணன் வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்