வேதாரண்யம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் 2 பேருக்கு வலைவீச்சு

வேதாரண்யம் அருகே சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update: 2018-12-14 22:30 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சந்திரமோகன். இவர் மதிய உணவு சாப்பிட தனது மோட்டார் சைக்கிளில் குரவப்புலம் வழியாக ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப் போது குரவப்புலம் சித்திவிநாயகர் கோவில் அருகே ரோட்டில் நின்று கொண்டிருந்த 2 பேர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகனை அழைத்தனர். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வாகனத்தை நிறுத்தி அவர்களிடம் ஏன் அழைத்தீர்கள் என கேட்டார். அப்போது அவரை அழைத்த அப்பகுதியை சேர்ந்த சத்தியசீலன், சிவராஜன் ஆகியோர் சந்திரமோகனின் மோட்டார் சைக்கிள் மீது தங்களது மோட்டார் சைக்கிளால் மோதி அவரை கீழே தள்ளினர். பின்னர் அருகே கிடந்த சிமெண்டு ஓடால் சந்திரமோகனின் தலையில் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதில் தலையில் ரத்தம் வடிந்த நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியசீலன், சிவராஜன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்