ஓசூரில் பரபரப்பு: அடுத்தடுத்து 3 வீடுகளில் நகைகள்-பணம் கொள்ளை மர்ம ஆசாமிகள் கைவரிசை
ஓசூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நகைகள், பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேருநகர் வ.உ.சி.தெருவில் வசித்து வருபவர் சூரஜ் சிங் (வயது 35). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர், ஓசூர் அருகே கெலமங்கலத்தில் ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வேறொரு பகுதியில் இருந்து, நேரு நகர் வ.உ.சி. தெருவில் உள்ள தற்போதைய வீட்டுக்கு குடிபெயர்ந்தார். இந்த நிலையில் நேற்று சூரஜ் சிங்கும், அவருடைய மனைவியும் வெளியே சென்றிருந்தனர்.
பின்னர் அவர்கள் பகல் 12 மணியளவில் மீண்டும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கோபி (42). தனியார் நிறுவன மேலாளர். நேற்று அவரது மனைவி அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். மீண்டும் அவர் வீடு திரும்பிய போது அவருடைய வீட்டில், பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் 2 வெள்ளி டம்ளர்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோல முதலாவது குறுக்குத்தெருவில் உள்ள சென்னப்பா என்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டிலும் நகை-பணம் கொள்ளை போயிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.