மர்ம காய்ச்சலால் உயிரிழந்த விமானப்படை வீரரின் உடல் அடக்கம் தர்மபுரியில் ராணுவ மரியாதையுடன் நடந்தது
மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விமானப்படை வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் தர்மபுரியில் அடக்கம் செய்யப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மதிகோன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பன். இவருடைய மகன் அன்பரசன் (வயது 32). இவர் இந்திய விமானப்படையில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். அன்பரசன் அண்மையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவருக்கு புதுடெல்லியில் உள்ள ஆஸ்பத்தியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அன்பரசனின் உடலை நேற்று காலை ராணுவ வாகனம் மூலம் மதிகோன்பாளையத்திற்கு விமானப்படை வீரர்கள் கொண்டு வந்தனர். அங்கு அவருடைய உடலுக்கு உறவினர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையடுத்து விமானப்படை வீரர்கள் மதிகோன்பாளையத்தில் உள்ள மயானத்திற்கு அன்பரசனின் உடலை ராணுவ மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு அவருடைய உடலுக்கு விமானப்படை அதிகாரிகள் மலர்வளையம் வைத்தும், துப்பாக்கிகளில் குண்டுகளை முழங்க செய்தும் அஞ்சலி செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.