புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் வெளியேற்றுப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2018-12-14 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதேபோல சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒவ்வொரு வார்டிலும் நோயாளிகளுக்கு கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த கழிவறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மலம் போன்றவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் வெளியேற்றப்பட வேண்டும். ஆனால் தற்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மலம் போன்றவை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று சுத்திகரிக்கப்படாமல் திறந்த வெளியில் உள்ள வாய்க்காலில் திறந்து விடப்படுகிறது.

இந்த கழிவுநீர் மற்றும் மலம் போன்றவை வாய்க்காலில் சென்று, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள புதுராஜாப்பட்டி பகுதியில் உள்ள வாடி ஊரணியில் சென்று கலக்கிறது. இதனால் அந்த ஊரணியில் உள்ள தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த ஊரணியில் உள்ள தண்ணீரை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவது இல்லை. மேலும் ஊரணியில் உள்ள தண்ணீரில் யாரும் இறங்குவது கூட கிடையாது.

இது குறித்து புதுராஜாப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் கூறுகையில், நாங்கள் எங்களது முன்னோர்கள் காலத்தில் இருந்து எங்கள் பகுதியில் உள்ள வாடி ஊரணியில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று, குடிக்க மற்றும் சமையல் செய்வதற்கு பயன்படுத்தி வந்தோம். நாங்கள் இந்த ஊரணியில் உள்ள தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருவதால், பொதுமக்கள் யாரையும் ஊரணியில் குளிக்க அனுமதிப்பதில்லை.

இந்நிலையில் தற்போது மருத்துவக்கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் மலம் போன்றவை தற்போது இந்த ஊரணியில் கலக்கிறது. இதனால் ஊரணியில் உள்ள தண்ணீர் கெட்டுப்போய் விட்டது. மேலும் தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் இந்த ஊரணியில் உள்ள தண்ணீரை தற்போது யாரும் பயன்படுத்துவது இல்லை. இதனால் நாங்கள் ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதில் இருந்து வரும் தண்ணீரை குடிக்க பயன்படுத்தி வருகிறோம்.

தற்போது ஆழ்குழாய் கிணற்றில் இருந்து வரும் தண்ணீரில் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு பல்வேறு வகையாக தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இருப்பினும் நாங்கள் வேறுவழியின்றி ஆழ்குழாய் கிணற்றில் இருந்து வரும் தண்ணீரை குடிக்க பயன்படுத்தி வருகிறோம். நாங்கள் நல்ல தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால், சுமார் 5 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டி உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை வாடி ஊரணியில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாடி ஊரணியில் உள்ள தண்ணீரை அகற்றிவிட்டு, ஊரணியை தூர்வாரி கொடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

மேலும் செய்திகள்