குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் தரிசனம்

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2018-12-14 23:15 GMT
தென்காசி, 

குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், கொடிமரத்துக்கு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி செல்வக்குமாரி, முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், திருவிளக்கு பூஜை ஒருங்கிணைப்பாளர் அன்னையா பாண்டியன், வர்த்தக சங்க தலைவர் காவையா, செயலாளர் அம்பலவாணன், துணை செயலாளர் நாராயணன், பொருளாளர் வேல்ராஜ் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வருகிற 23-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வீதிஉலா நடக்கிறது. வருகிற 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.20 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 21-ந் தேதி சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 23-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்திர சபையிலும், 5 மணிக்கு திரிகூட மண்டபத்திலும் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடக்கிறது.

விழா நாட்களில் காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்ஜோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி செல்வகுமாரி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவிலிலும் திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடிபட்டம் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து காலை 5.50 மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இதில் காலை, மாலை சுவாமி-அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது. 9-ம் திருநாளான வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) விநாயகர் தேரோட்டமும், 23-ந்தேதி முக்கிய விழாவான திருவாதிரை திருவிழாவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

களக்காடு அருகே உள்ள மேலக்கருவேலங்குளம் சவுந்தரபாண்டீஸ்ரர் கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 22-ந் தேதியும், 23-ந் தேதி நடராஜரின் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.

மேலும் செய்திகள்