திருச்செந்தூரில் மின்சாரம் தாக்கி மீனவர் சாவு கம்பியில் சிக்கிய பட்டத்தை எடுக்க சென்றபோது பரிதாபம்
திருச்செந்தூரில் மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை எடுக்க சென்றபோது, மின்சாரம் தாக்கி மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அமலி நகரைச் சேர்ந்தவர் ராஜ். இவருடைய மகன் டிக்சன் (வயது 31). மீனவர். இவருடைய மனைவி மெரிடா (23). இவர்களுக்கு அபிஷா (7), அக்சரா (4) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும், அபிஷா தனது வீட்டின் அருகில் நூலினால் பட்டம் விட்டு கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மின்கம்பம் வழியாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பியில் பட்டம் சிக்கி கொண்டது. இதுகுறித்து அவர், தன்னுடைய தந்தையிடம் தெரிவித்தார்.
உடனே டிக்சன் அந்த மின்கம்பத்தில் ஏறி, பட்டத்தை எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியின் மீது அவரது கை பட்டது. இதனால் மின்கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அவருக்கு திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருச்செந்தூரில் மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை எடுக்க சென்றபோது, மகளின் கண் எதிரே மீனவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.