போலீசார் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் கூடுதல் துணை சூப்பிரண்டு அறிவுரை
போலீசார் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என நாமக்கல்லில் நடந்த நிறைவாழ்வு பயிற்சி வகுப்பில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் அறிவுரை வழங்கினார்.
நாமக்கல்,
நாமக்கல்லில் போலீசாருக்கான 2-ம் கட்ட நிறைவாழ்வு பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், திட்ட இயக்குனர் (குழந்தை தொழிலாளர் மீட்பு) அந்தோனி ஜெனித் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் என 40 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முன்னதாக பயிற்சி வகுப்பில் பங்கேற்ற போலீசாருக்கு, நிறைவாழ்வு பயிற்சிக்கான கையேடுகளை மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
முந்தைய காலத்தில் குற்றத்தை தடுப்பதே போலீசாரின் பணியாக இருந்தது. தற்போது பாதுகாப்பு சம்பந்தமான அனைத்தையும் செய்ய வேண்டியது நமது பணியாக உள்ளது. இதனால் பணிச்சுமை அதிகரித்து உள்ளது. அதை குடும்பத்தினருக்கு புரிய வைத்து தனிப்பட்ட வாழ்க்கையையும், பணியையும் சமநிலையோடு போலீசார் கையாள வேண்டும். அதற்கு முக்கியமாக சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
அதேபோல் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி அவர்கள் தோளில் சாய இடம் கொடுக்க வேண்டும். மேலும் குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து அந்த வழியில் அவர்களை கொண்டு செல்ல வேண்டும். சமூக வலைதளங்களில் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் அதிகம் உள்ளது. எனவே அதற்கும் தினந்தோறும் நேரம் ஒதுக்க வேண்டும். பயிற்சியை பெற்று மன அழுத்தம் இல்லாமல் குடும்பத்தையும், பணியையும் கையாளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் நன்றி கூறினார்.