ஓசூரில் உழவர் பேரியக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஓசூரில் உழவர் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்த விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, உழவர் பேரியக்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இல.வேலுசாமி, பா.ம.க. மாநில துணைப்பொதுச்செயலாளர் சுப.குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மாவட்டத்தில் காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில், மாநில சட்ட பாதுகாப்பு குழு துணை செயலாளர் கனல் கதிரவன், பா.ம.க. முன்னாள் மாவட்ட தலைவர்கள் அருண்ராஜன், சுரேஷ்ராஜன், கந்தசாமி, முன்னாள் ஓசூர் நகர பா.ம.க. செயலாளர் விசுவநாதன், முன்னாள் நகர தலைவர் ஆறுமுகம் மற்றும் ஓசூர், சூளகிரி பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், கோபி நன்றி கூறினார்.