கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணை வெளியீடு
கர்நாடகத்தில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. மார்ச் மாதம் 21-ந் தேதி தொடங்கும் தேர்வானது ஏப்ரல் மாதம் 4-ந் தேதியுடன் முடிவடைகிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, அடுத்த ஆண்டு(2019) மார்ச் மாதம் 21-ந் தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வானது ஏப்ரல் மாதம் 4-ந் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த அறிவிப்பை கர்நாடக உயர் கல்வித்துறை நேற்று வெளியிட்டது. தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:-
மார்ச் மாதம் 21-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் மொழி தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்த நாளில் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, உருது, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன. பின்னர் 23-ந் தேதி பொருளாதார பாடப்பிரிவுக்கான தேர்வும், 25-ந் தேதி கணிதம், சமூகவியல்(சோசியாலஜி) தேர்வுகளும் நடைபெறுகின்றன. இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடையும்.
பின்னர் 27-ந் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை 2-ம் மொழி தேர்வுகள் (ஆங்கிலம், கன்னடம்) நடைபெறுகின்றன. அதையடுத்து 29-ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும். இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும்.
ஏப்ரல் மாதம் 2-ந் தேதி அறிவியல், அரசியல் அறிவியல் தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வுகள் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடை யும்.
ஏப்ரல் மாதம் 4-ந் தேதி 3-வது மொழி தேர்வுகள் நடைபெறுகின்றன. இதில் இந்தி, கன்னடா, ஆங்கிலம், அரபி, பெர்சியன், உருது, சமஸ்கிருதம், கொங்கனி, துளு ஆகிய மொழி தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்த தேர்வுகள் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு முடிவடையும்.
இந்த தேர்வுக்கான வினாத்தாளை மாணவ-மாணவிகள் படித்து அறிந்து கொள்ளும் வகையில் மேற்கூறிய தேர்வு நேரத்தில் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாள்கள் படிக்க வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.