காங்கிரசில் வட கர்நாடகத்திற்கு அநீதி ; முன்னாள் மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் மந்திரி எம்.பி.பட்டீல் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு,
முன்னாள் மந்திரி எஸ்.ஆர்.பட்டீல் மூத்த தலைவர். மேல்-சபை தலைவர் பதவியை அலங்கரிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னணி தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் நாங்கள் மேற்கொண்ட முயற்சி நிறைவேறவில்லை. வட கர்நாடகம் மற்றும் தென்கர்நாடகம் ஆகிய இரண்டும், 2 கண்களை போன்றது. இவை இரண்டையும் வேறு பகுதிகள் என்று பார்க்கக்கூடாது. கர்நாடகத்தின் வளர்ச்சியில் வட கர்நாடகத்தின் பங்கு மிக முக்கியமானது.
காங்கிரசில் வட கர்நாடகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தான் அதிகம். அந்த பகுதியில் 41 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஆனால் 5 பேருக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தென்கர்நாடகத்தில் உள்ள 36 எம்.எல்.ஏ.க்களில் 9 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனால் வட கா்நாடகத்திற்கு அநீதி ஏற்பட்டுள்ளது. இந்த வித்தியாசத்தை போக்க வேண்டும்.
இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.