தேர்தல் வெற்றியை ரத்து செய்யக்கோரி வழக்கு: முதல்-மந்திரி பட்னாவிசுக்கு நோட்டீஸ் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வேட்பு மனுவில் கிரிமினல் வழக்குகளை மறைத்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதற்கு பதிலளிக்குமாறு முதல்-மந்திரிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

Update: 2018-12-13 23:51 GMT

மும்பை, 

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலின் போது தேவேந்திர பட்னாவிஸ் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவர் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்த விவரங்களை மறைத்ததால், அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி சத்தீஷ் உகேய் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனு மீது விளக்கம் அளிக்குமாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து மராட்டிய முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தன்மீது உள்ள அனைத்து வழக்குகள் குறித்த விவரங்களையும் வேட்புமனுவில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும்.

மும்பை ஐகோர்ட்டு ஏற்கனவே மனுதாரரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என கூறி வழக்கை தள்ளுபடி செய்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், “முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறநெறி மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து பேசுகிறார். ஆனால் அவர் மீதான 2 கிரிமினல் வழக்குகளை மறைத்துள்ளார். இதன் மூலம் யார் வெளிப்படை தன்மை கொண்ட ஆட்சியை நடத்தினார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

முதல்-மந்திரி பதவியை தக்க வைத்துக்கொள்வதற்கான தார்மீக உரிமையை பட்னாவிஸ் இழந்துவிட்டார். அவரது தேர்தல் வெற்றியை சுப்ரீம் கோர்ட்டு எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம். எனவே பட்னாவிஸ் உடனடியாக பதவி விலகவேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்