ரெயில் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

வேலை தேடி மும்பை வந்த வாலிபர் ரெயில் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

Update: 2018-12-13 23:02 GMT

மும்பை, 

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மகன் ஹிரிதேக்(வயது17). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வேலை தேடி மும்பை வந்தாா். வசாய் பகுதியில் நண்பர் ஆயுசுடன் (19) தங்கி இருந்தார். சம்பவத்தன்று மாலை ஹிரிதேக் நண்பர் ஆயுசுடன் வசாயில் இருந்து தாதருக்கு மின்சார ரெயிலில் வந்தார். அப்போது ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. எனினும் ஆயுஷ் ரெயில் பெட்டிக்குள் சென்றுவிட்டார்.

ஹிரிதேக் மும்பைக்கு புதியவர் என்பதால் அவரால் கூட்டத்தை சமாளித்து உள்ளே செல்ல முடியவில்லை. எனவே அவர் ரெயில் படியில் தொங்கியபடியே பயணம் செய்து உள்ளார்.

ரெயில் அந்தேரி தாண்டி வந்து கொண்டு இருந்தபோது ஹிரிதேக் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கிய அவர் உடல் துண்டாகி பலியானார். அப்போது, அவரது உடலின் ஒரு பகுதி ரெயில் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இந்தநிலையில் ரெயில் சக்கரத்தில் ஏதோ சிக்கிக்கொண்டதை உணர்ந்த கார்டு வில்லேபாா்லே சென்றவுடன், இது குறித்து ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தார். அப்போது ஹிரிதேக் உடல் ரெயில் சக்கரத்தில் சிக்கி இருந்தது தெரிந்தது.

இதையடுத்து ரெயில்வே போலீசார் ரெயில் சக்கரத்தில் சிக்கியிருந்த ஹிரிதேக்கின் சிதைந்த உடலை மீட்டனர். அவரின் மற்றொரு உடல் பகுதி 1 கி.மீ. தூரத்தில் இருந்து தண்டவாளத்தில் மீட்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்