விவசாயத்தில் சாதித்து மத்திய அரசு விருது பெற்ற பெண், சிவகங்கை கலெக்டரை சந்தித்தார்; மாவட்டத்துக்கே பெருமை தேடிதந்ததாக பாராட்டு
விவசாயத்தில் சாதித்து மத்திய அரசின் ‘மகிளா கிஷான்‘ என்ற விருதை பெற்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அழகு என்ற பெண், அந்த மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனை நேற்று சந்தித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை என்ற ஊரை சேர்ந்தவர் சுப்பிரமணியன், விவசாயி. அவருடைய மனைவி அழகு (வயது 45). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
கணவரைப் போன்று விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட அழகு, ஒருங்கிணைந்த பண்ணையம் முறையில் பல்வேறு விவசாய பணிகளை செய்து சாதித்து வருகிறார்.
குறிப்பாக இயற்கை முறையிலான விவசாயம், கோழி வளர்த்தல், கறவைமாடு வளர்த்தல், பெண்களுக்கான அழகு சாதன பொருட்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடும் அழகு, அந்தக் கிராமமே பயன்பெறும் வகையில் 60 குடும்பங்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவையான கறவைமாடுகளை பெற்றுத்தந்துள்ளார். மேலும் கூட்டுறவு சங்கமாக அமைத்து அதன் மூலம் ஆவின் நிர்வாகத்துக்கு தினந்தோறும் பால் வழங்கப்பட்டு வருவதுடன், அங்கு பால் கொள்முதல் மையம் ஆவின் நிர்வாகத்தால் உருவாக காரணமாக இருந்தவர்.
இந்த பணிகளை பாராட்டும் வகையில், மத்திய அரசின் ‘மகிளா கிஷான்‘ விருதுக்கு அவர் தேர்வானார். டெல்லியில் நடந்த விழாவில் கடந்த 6-ந் தேதி அந்த விருதை பெற்றுள்ளார்.
பின்னர் ஊர் திரும்பிய அழகு, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கலெக்டர் ஜெயகாந்தனை நேற்று சந்தித்தார். அப்போது, அவரை கலெக்டர் வாழ்த்தினார். இதுதொடர்பாக கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:-
நெற்குப்பை பேரூராட்சியில் ஒருங்கிணைந்த பண்ணையம் முறையில் இயற்கை விவசாயத்தை அழகு மேற்கொண்டு வருகிறார். அவர் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் தகுந்த ஆலோசனைப் பெற்று, வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, மனையியல் துறை சார்ந்த பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறார்.
குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட கோ.5 என்ற புதிய ரக வெங்காயத்தை முதன்முறையாக பயிரிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இந்த பெண்மணி சாதனை படைத்துள்ளார். மேலும் வேளாண் அறிவியல் மையம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கடாக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைத்து, அதிலும் சாதித்துள்ளார்.
இவ்வாறு வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் மூலம் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு கண்டுபிடிப்பையும் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, அதில் சாதனை செய்யும் அழகுவை பாராட்டும் விதமாக மத்திய அரசு அவருக்கு ‘மகிளா கிஷான் விருது‘ வழங்கி கவுரவித்துள்ளது. இதன் மூலம் மாவட்டத்துக்கே அவர் பெருமையை தேடித்தந்துள்ளார். அவரைப் போல் மற்ற விவசாயிகளும் வேளாண் அறிவியல் நிலையத்தின் ஆலோசனைகளை பெற்று சிறப்பாக செயல்படுவதுடன், மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கிட உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வவாறு அவர் கூறினார்.