நள்ளிரவில் தொடரும் சம்பவம்: கூட்டுறவு வங்கி வளாகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்தல் - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
கூட்டுறவு வங்கி வளாகத்திற்குள் நள்ளிரவில் புகுந்து சந்தன மரத்தை வெட்டி கடத்திய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை ராம்நகர் விவேகானந்தர் சாலையில் தமிழ்நாடு கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி உள்ளது. இதன் பின்புறம் ஒரு சந்தன மரம் நின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வங்கி வளாகத்திற்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து அங்கு நின்ற சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்று உள்ளனர். நேற்று காலையில் அங்கு சென்ற காவலாளி சந்தன மரம் வெட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சந்தன மரத்தை வெட்டி கடத்திய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, சந்தன மரங் களை வெட்டி கடத்துவது சட்டப்படி குற்றமாகும். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படும் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வந்தது. போலீசாரின் தீவிர ரோந்து பணியால் இதில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது குறைந்தது. இந்தநிலையில் பீளமேடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது.
இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாடாபாத்தில் உள்ள உணவு பாதுகாப்பு கழக குடோனுக்குள் நின்ற சந்தன மரத்தை நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் வெட்டி சென்றனர். இங்கு சந்தன மரத்தை வெட்டி கடத்திய கும்பல் தான் தமிழ்நாடு கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி வளாகத்தில் நின்ற சந்தன மரத்தை வெட்டி கடத்தியிருக்கலாம் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். கோவையில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே நள்ளிரவு நேரங்களில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனை தடுத்து சந்தன மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.