வாய்க்காலில் குப்பை கொட்டினால் அபராதம்: துப்புரவு பணியாளர்கள் வராவிட்டால் போனில் தகவல் தெரிவிக்கலாம் - நகராட்சி அதிகாரிகள் தகவல்

வாய்க்காலில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்றும், துப்புரவு பணியாளர்கள் வராவிட்டால் போனில் கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று புதுவை, உழவர்கரை நகராட்சி ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-12-13 22:30 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஆதர்ஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

புதுவையில் அனைத்து நகர கிராமப்புறங்களில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. அதுபோல புதுச்சேரி நகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு வருகிறது. தூர்வாரிய வாய்க்கால்களில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. பொதுமக்கள் குப்பைகளை வாய்க்கால்கள், காலிமனைகள், வீதிகளில் கொட்ட வேண்டாம். குப்பை தொட்டியில் மட்டுமே குப்பை கொட்ட வேண்டும். அல்லது வீட்டிற்கு வரும் சுகாதார ஊழியர்களிடம் கொடுக்கவேண்டும்.

வியாபாரிகள் அவர்களது வியாபார ஸ்தலங்களில் கட்டாயமாக குப்பை தொட்டி வைத்திருக்கவேண்டும். இதனை செய்ய தவறினால் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் கட்டுப்பாட்டாளரால் அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்த தவறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுவை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார் (முத்தியால்பேட்டை மற்றும் ராஜ்பவன் தொகுதி), எத்திராஜ் (புல்வார்டு மற்றம் உப்பளம் தொகுதி), அருணாசலம் (நெல்லித்தோப்பு தொகுதி), நடேசன் (உருளையன்பேட்டை), கூத்தாண்டவன் (முருங்கப்பாக்கம் மற்றும் முதலியார்பேட்டை தொகுதி), மேலும் புதுச்சேரி நகராட்சி கட்டுப்பாட்டாளர்கள் பார்த்திபன் (பெரிய மார்க்கெட் மற்றும் புல்வார்டின் ஒரு சில பகுதிகள்), லட்சுமணன் (புதிய பஸ்நிலையம்) ஆகியோர் தங்கள் பணியிடத்தில் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இதுவரை சுகாதார ஆய்வாளர்கள் 1,689 பேருக்கு அபராதம் விதித்து சுமார் ரூ.1.50 லட்சம் வரை வசூலித்துள்ளனர்.

அனைத்து வீடுகளுக்கும் ஸ்வச்சதா ஊழியர்கள் சென்று குப்பைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தங்கள் வசிக்கும் வீடுகளுக்கு ஸ்வச்சத்தா ஊழியர்கள் வரவில்லை என்றாலம், குப்பைகளை சரிவர சுத்தம் செய்யவில்லை என்றாலும், வேறு புகார்கள் இருந்தாலும் புதுவை நகராட்சி கட்டுப்பாட்டு அறையை 0413–2334074, 2220514 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஆணையர் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.

உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

உழவர்கரை நகராட்சியில் பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை வீடுகளுக்கு வரும் ஸ்வச்சத்தா ஊழியர்களிடம் கொடுக்கவேண்டும். வீதிகளில் வாய்க்கால்களில் கொட்ட வேண்டாம். அனைத்து வீடுகளுக்கும் ஸ்வச்சத்தா ஊழியர்கள் சென்று குப்பைகளை வாங்கவேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளார்கள்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு ஸ்வச்சத்தா ஊழியர்கள் வரவில்லை என்றாலோ அல்லது இதுகுறித்து வேறு குறைகள் இருப்பின் உழவர்கரை நகராட்சியின் கட்டுப்பட்டு அறைக்கு 0413–2200382 என்ற போன் எண்ணில் அலுவலக நேரத்தில் தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஆணையர் கந்தசாமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்