மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 3 ஆண்டு சிறை

காரைக்காலில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2018-12-13 22:15 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திரு-பட்டினம் போலகம் வி.எஸ்.நகரை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 28). திருமணமான இவர், ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற நிரவி ஓடுதுறை பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியுடன் சாமுவேலுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியது.

இந்தநிலையில் முதல் திருமணத்தை மறைத்த சாமுவேல், அந்த மாணவியை கடந்த 13-9-15 அன்று காரைக்காலில் உள்ள ஒரு கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துகொண்டு, பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் சில நாட்கள் கழித்து சாமுவேலுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விவரம் மாணவிக்கு தெரியவந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த மாணவி, நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், நிரவி போலீஸ் நிலையத்தில் சாமுவேல் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாமுவேலை கைது செய்தனர். இந்த வழக்கு காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நேற்று இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் குற்றம்சாட்டப்பட்ட சாமுவேல், ஏற்கனவே திருமணமானதை மறைத்து, பள்ளி மாணவியை கடத்திச்சென்று 2-வது திருமணம் செய்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், 2 தண்டனையும் ஏக காலத்தில் (3 ஆண்டு) அனுபவிக்கவும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி சிவகடாச்சம் தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்