திருமாவளவன் குறித்து அவதூறு கருத்து: எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காரைக்காலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-13 22:30 GMT
காரைக்கால்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயரையும், கட்சி தலைவர் திருமாவளவன் பெயரையும் கெடுக்கும் விதமாக பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக கூறி, எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காரைக்கால் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எச்.ராஜா மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். திருமாவளவன் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் வணங்காமுடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து காரைக்கால் தெற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு மாரிமுத்துவிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒரு புகார் மனு அளித்தனர்.

அதில் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

மேலும் செய்திகள்