சமத்துவ மக்கள் கட்சி அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடும் ஆர்.சரத்குமார் பேட்டி

சமத்துவ மக்கள் கட்சி இனி நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடும் என்று அதன் தலைவர் சரத்குமார் கூறினார்.;

Update:2018-12-14 04:15 IST
ஆம்பூர், 

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடந்த சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண வரவேற்பு விழா மற்றும் ஆம்பூர் அருகே பெரியாங்குப்பத்தில் கட்சியின் தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியும், கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தும் பேசினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் என்பது மிகவும் எளிதானது அல்ல. கடந்த 22 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறேன். கட்சி தொடங்கி 12 ஆண்டுகள் ஆகிறது. வீட்டில் இருந்து விட்டு நான் அரசியலுக்கு வரவில்லை. கடையில் விற்கும் லட்டு அல்ல அரசியல். லட்டு இனிக்குமா, கசக்குமா என்பது புதிதாக அரசியலுக்கு வர இருப்பவர்களுக்கு தெரியாது. வந்த பின்தான் அதுகுறித்து அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

சினிமா வாய்ப்பு முடிந்து ஓய்வு பெறும் நிலையில் அரசியலுக்கு நான் வரவில்லை. புதிதாக பலர் அரசியலுக்கு வருகின்றனர். யார் இல்லாத காரணத்தால் அவர்கள் அரசியலுக்கு வருகின்றனர் என்பது தெரியும்.

சமத்துவ மக்கள் கட்சி இனி நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடும். வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு எங்கள் பலத்தை அறிய உள்ளோம். மேலும் சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை விளக்கி தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி மாதம் சுற்றுப்பயணம் செல்ல உள்ளோம். அப்போது பொதுமக்களுக்கு என்ன தேவை?, என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து அவர்களிடம் கேட்டறிய உள்ளோம்.

மத்திய அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. அதன் வெளிபாடுதான் 5 மாநில தேர்தல் முடிவுகள். கஜா புயலுக்கு தமிழக அரசு கேட்ட நிதியை ஒதுக்கவில்லை. புயல் பாதிப்பை கூட பிரதமர் வந்து பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஆம்பூர் தொகுதி செயலாளர் குமரவேல், மாவட்ட செயலாளர் ஞானதாஸ், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்