திருப்பத்தூரில் நரிக்குறவ பெண்களுக்கு நகராட்சி கடை ஒதுக்கீடு தமிழ்நாட்டில் முதல் முறையாக திறக்கப்பட்டது
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக திருப்பத்தூரில் நரிக்குறவ பெண்கள் தயாரிக்கும் ஊசி, மணி, பாசி போன்ற பொருட்களை விற்பனை செய்ய பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கடை ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.
திருப்பத்தூர்,
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பஸ் நிலையம் முன்பு நின்று கொண்டு ஊசி, மணி, பாசி விற்ற நரிக்குறவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மாணவ - மாணவிகள் சமுதாய பணிக்காக அளித்த பணத்தில் இருந்து, திருப்பத்தூர் பாய்ச்சல் அருகே வசிக்கும் நரிக்குறவ பெண்கள் சுய உதவி குழுவுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கினர்.
அந்த கடனை அவர்கள் சரியாக திருப்பி செலுத்தினார்கள். ஆகையால் நரிக்குறவ பெண்களின் சுயஉதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பல வகையான பொருட்களை விற்பனை செய்ய திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கடையை 2 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடைக்கான வாடகை மற்றும் பணி ஆட்கள் சம்பளம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை நபார்டு வங்கி மானியமாக வழங்கியது.
இந்த கடை திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு நரிக்குறவர் இன தலைவர் பொண்ணை தலைமை தாங்கினார். தூய நெஞ்சக் கல்லூரி விரிவாக்கப்பட்ட சமுதாய பணி இயக்குனர் ஹென்றி டேனியல் அம்ரோஸ் வரவேற்றார். கடையை சென்னை நபார்டு வங்கி துணை பொது மேலாளர் பி.பி.சுப்பிரமணியன் திறந்து வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி மேலாளர் ராஜசேகர், கல்லூரி ரெக்டர் ஆண்டனிராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். முடிவில் திட்ட இயக்குனர் நிக்கோலா பிரகாஷ் நன்றி கூறினார். தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இங்குதான் நரிக்குறவர்களுக்கு தனியாக கடை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நரிக்குறவ பெண்கள் குழு தலைவர் ரதி கூறுகையில், ‘இதற்கு முன்பு நாங்கள் பாசி, மணி, ஊசி ஆகியவற்றை தெரு தெருவாக சென்றும், பஸ் நிலையம், ரெயில் நிலையம் ஆகிய இடங்களிலும் விற்பனை செய்தோம். தற்போது நாங்கள் ருத்ராட்ச மணி மாலை, துளசி மாலை, ஸ்படிக மாலை, ஜெபமாலை, தியான மாலை உள்பட 50 வகையான மாலைகளை நாங்களே கையால் செய்கிறோம்.
அவற்றை இங்கிருந்து ஈரோடு, மதுரை, சேலம், கன்னியாகுமரி வரை விற்பனை செய்து வருகிறோம். ஜெபமாலை சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்கிறோம். எங்கள் வாழ்வாதாரம் இப்போது மேம்பட்டிருக்கிறது. எங்கள் குடும்பத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தற்போது 3 பேர் கல்லூரியில் படிக்கின்றனர். எங்கள் சுய உதவி குழுக்கள் நல்ல நிலையில் முன்னேறி கொண்டிருக்கிறது’ என்றார்.