கடலூர் துறைமுகத்தில்: 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் நேற்று 2-வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
கடலூர் முதுநகர்,
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலையானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு 1150 கிலோ மீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு 1350 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இந்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையவும், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை புயலாக மாறவும் வாய்ப்புள்ளது. நாளை (சனிக்கிழமை) நண்பகல் இது அதி தீவிர புயலாக மாறக்கூடும். தற்போது இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில் (ஓங்கோல் -மசூலிப்பட்டினம் இடையே) கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. கரையை கடக்கும் நேரத்தில் சற்று வலுவிழக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையொட்டி நேற்று கடலூர் துறைமுகத்தில் தொலைதூர புயல் முன்னெச்சரிக்கையாக 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடல் காற்று அதிகமாக வீசக்கூடும் என்பதாலும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதாலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் நேற்று 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் தங்கள் படகுகளை துறைமுகம் மற்றும் கடற்கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். ஒரு சில பைபர் படகு மீனவர்கள் மட்டும் மீன் பிடிக்க கடலுக்கு சென்று திரும்பினர்.