திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு எதிர்ப்பு: நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்பம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.;
கம்பம்,
கம்பம் நகராட்சி பகுதியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி கம்பம் காமாட்சி கவுடர் நகர், முகைதீன் ஆண்டவர் புரம், நந்தகோபால்சாமி நகர், வாரச்சந்தை, ஆங்கூர்பாளையம் சாலையில் உள்ள பழைய குப்பைக்கிடங்கு ஆகிய பகுதியில் மக்கும் குப்பைகளில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது சில இடங்களில் பணிகள் முடிவடைந்து விட்டன. பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக சில இடங்களில் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்தநிலையில் கம்பம் நகராட்சி 30-வது வார்டு ஆங்கூர்பாளையம் சாலையில் உள்ள பழைய குப்பைக்கிடங்கில், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம், தங்களது பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அந்த பணி நடந்து வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 30-வது வார்டு பகுதி மக்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாணி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
அதன்பேரில் மறியலை கைவிட்ட பொதுமக்கள் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சி தொகுதி செயலாளர் திருநாவுக்கரசு, நகர செயலாளர் அய்யப்பன் ஆகியோர் நகராட்சி கமிஷனர் சங்கரனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில், குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படுகிற நுண்ணுயிர் உரம் தயாரிப்புக்கூடத்தால் சுகாதாரக்கேடு ஏற்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.