காயல்பட்டினத்தில் வீடு புகுந்து 4 பவுன் தங்க நாணயம் திருட்டு வேலைக்கார பெண்ணுக்கு வலைவீச்சு
காயல்பட்டினத்தில் வீடுபுகுந்து 4 பவுன் தங்க நாணயத்தை திருடிக் கொண்டு தப்பிய வேலைக்காரப் பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆறுமுகநேரி,
காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெருவைச் சேர்ந்தவர் ஜனாப் மகபூப். இவர் கேரள மாநிலத்தில் கவரிங் நகை கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரபேக்கா (வயது 46). இவர்களுடைய மகள் முஸ்லிகா, பிரசவத்துக்காக திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். எனவே அவர், மகளை ஆஸ்பத்திரியில் இருந்து கவனித்து வருகிறார்.இவரது வீட்டில் லூர்தம்மாள் என்பவர் வேலை செய்து வருகிறார்.
இவர் தினமும் வீட்டில் சமையல் செய்து, ஆஸ்பத்திரிக்கு சாப்பாடு எடுத்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று லூர்தம்மாள், ரபேக்காவின் வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் தங்க நாணயங்கள், ரூ.4 ஆயிரத்தை திருடியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த சபீனாவை பார்த்ததும், லூர்தம்மாள் தங்க நாணயம், பணத்துடன் வெளியே தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணிமுத்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான லூர்தம்மாளை தேடி வருகிறார்.