ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை போலீஸ் பிடித்து சென்றதால் தூத்துக்குடியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
தூத்துக்குடியில் நேற்று ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை போலீஸ் பிடித்து சென்றதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் சில தகவல்களை பதிவு செய்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதிக்கு வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 8 பேர் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஆலோசனையில் ஈடுபட்ட 8 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீட்டின் அருகே திரண்டு, சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 8 பேரிடமும் போலீசார் எழுதி வாங்கி கொண்டு விடுவித்தனர். இதை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.