ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டும் கலெக்டர் தகவல்

ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-13 22:45 GMT
திருவண்ணாமலை,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் ஓய்வூதியர்களில் சிலர் பொதுத்துறை வங்கி திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு வரை வங்கிகளில் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வந்தனர். அவ்ஓய்வூதியர்கள் இதனால் பல சிரமங்களை சந்தித்து வந்தனர். அவர்களுடைய சிரமங்களை குறைக்கும் பொருட்டும், அவர்களது நலன் காக்கும் பொருட்டும் பொதுத்துறை வங்கி திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும் சுமார் 70 ஆயிரம் தமிழக அரசின் ஓய்வூதியர்கள் தமிழக அரசின் ஆணைப்படி இந்த ஆண்டு முதல் அவர்கள் கருவூலத்துறை மூலமாக ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

அவர்கள் தற்போது தமிழகத்தில் உள்ள மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை அலுவலகங்களின் மூலமாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். மேலும் பொதுத்துறை வங்கி திட்டத்தில் உள்ள தமிழக அரசு ஓய்வூதியர்கள் கடந்த ஆண்டு வரை நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தங்களது வாழ்நாள் சான்றினை தாங்கள் ஓய்வூதியம் பெற்று வந்த வங்கிகளில் அளித்து வந்தனர்.

தற்போது அவ்ஓய்வூதியர்கள் அனைத்து பதிவேடுகளும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், கருவூலங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டதால் இவ்வருடத்திற்கான தங்களது வாழ்நாள் சான்றினை தங்கள் ஓய்வூதியம் பராமரிக்கப்படும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை மற்றும் மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்களில் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்