பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை குப்பையில் வீச்சு ஆரணி அருகே பரபரப்பு

ஆரணி அருகே பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு குப்பையில் வீசப்பட்டு கிடந்தது.

Update: 2018-12-13 23:00 GMT

ஆரணி, 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூர் பொன் நகர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளி அருகே நேற்று காலையில் பொதுமக்கள் நடைபயிற்சி சென்றனர். அப்போது குழுந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது, சாலையோரத்தில் குப்பைகள் கொட்டி வைத்துள்ள பகுதியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை சிகிச்சைக்காக களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு பணியில் இருந்த டாக்டர் குழந்தையை பரிசோதனை செய்து பார்த்த போது குழந்தை நலமாக இருப்பதாகவும், எனினும் குழந்தைக்கு எடை குறைபாடு உள்ளதால் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதுகுறித்து ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி வழக்குப்பதிவு செய்து, குழந்தையை குப்பையில் வீசிவிட்டு சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்