நாடாளுமன்ற தேர்தலை ஒன்றுபட்டு சந்திக்க சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் எதிர்க்கட்சி அணியில் சேர வேண்டும் : சரத்பவார் வலியுறுத்தல்
நாடாளுமன்ற தேர்தலை ஒன்றுபட்டு சந்திக்க எதிர்க்கட்சிகள் அணியில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் சேர வேண்டும் என்று சரத்பவார் வலியுறுத்தினார்.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு நேற்று 78 வயது பிறந்தது. அவரை கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் நேரில் வாழ்த்தினர். பின்னர் சரத்பவார் நிருபர்களிடம் கூறியதாவது:-
5 மாநில தேர்தல் முடிவுகளில் பா.ஜனதாவுக்கு படுதோல்வி கிடைத்து உள்ளது. சத்தீஷ்கார், ராஜஸ்தானில் காங்கிரஸ் அபார வெற்றியை பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்து உள்ளது. இந்த தேர்தல் மூலம் மோடி அரசின் அதிருப்பதியை வாக்காளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிரான மோடி அரசின் கொள்கைகளை மக்கள் புறக்கணித்து உள்ளனர். ரிசர்வ் வங்கியை கலந்து ஆலோசிக்காமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி எடுத்தார். இதனால் நன்மை எதுவும் கிடைக்காததால் மக்கள் விரும்பவில்லை.
தற்போதைய தேர்தல் முடிவுகள் மாற்றத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு சந்திக்க வேண்டும். அந்த நோக்கத்தில் எங்களது கட்சி காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. இதேபோல சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும் எதிர்க்கட்சிகள் அணியில் சேர வேண்டும்.
இந்த தேர்தல் முடிவுகளால் பா.ஜனதாவின் நீண்ட நாள் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் எதிர்கால தேர்தல்களில் அவர்கள் இருவரும் கூட்டணி வைத்து தான் போட்டியிடுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி எதிர்க்கட்சிகள் அணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்ற கேள்விக்கு, அதுபோன்ற ஆலோசனை நடப்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சரத்பவார் பதிலளித்தார்.
முன்னதாக 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது:-
அகந்தை மிக்க தலைவர்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்து, 5-க்கு 0 என்ற கணக்கில் பா.ஜனதாவை தோல்வியுற செய்துள்ளனர்.
அரசின் முடிவுகளான ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் வேலைவாய்ப்பின்மையால் மக்கள் அனுபவித்துவரும் நெருக்கடி தான் இப்படி ஓட்டுகளாக வெளிப்பட்டுள்ளது. பா.ஜனதாவுக்கு பிரியாவிடை கொடுக்க நேரம் வந்துவிட்டதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.